மணமேல்குடி பகுதியில் மீனவர் குழந்தைகள் நலனுக்காக மீன்வள கல்லூரி துவங்க வேண்டும்



புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் குழந்தைகள் நலனுக்காக மணமேல்குடி பகுதியில் மீன்வளக்கல்லூரி தொடங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவிற்கு அதிக அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தொழிலாகவும், லட்சக் கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் தொழிலாகவும் மீன்பிடித் தொழில் விளங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி தொடங்கி, முத்துக்குடா வரை உள்ள கடலோரப் பகுதிகளில் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்தில் விசைப்படகுகள் மூலமும், கட்டுமாவடி, பிரதாபிராமன்பட்டினம், மணமேல்குடி, புதுக்குடி, அய்யம்பட்டினம், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்படகுகள் மூலமும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன. மீனவர்களின் குழந்தைகளுக்கு தேவையான கல்வியறிவு கிடைக்காததால், அவர்களும் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

மீனவர்களின் குழந்தைகள் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய கல்வி அறிவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகமும், தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. நாகப்பட்டினமும், தூத்துக்குடியும் நீண்ட தூரத்தில் உள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் குழந்தைகள் இக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் மீன்வளக் கல்லூரிகள் சேர்ந்து படிப்பதால், கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்பு குறித்து அறிந்து வைத்துள்ள மீனவரல்லாத பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மீன்வள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்த்து படிக்கவைத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ள நிலையில், மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் மீன்வளக் கல்லூரி தொடங்கினால், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் குழந்தைகள் இக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பாக அமையும். இக்கல்லூரிகளில் படிப்பதால், மீன்பிடி தொழில், மீன்பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றை மீனவர்களின் குழந்தைகள் கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும். மீனவர்களின் குழந்தைகள் மீன்பிடித் தொழிலின் புதிய உத்திகளை கற்றுக்கொள்வதால், அதை அவர்கள் தங்கள் பெற்றோருக்கும் கற்றுக் கொடுப்பதால், மீனவர்களின் வாழ்க்கை தரம் உயரும். மேலும் மீன்வளக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவர் ஒருவர் கூறியது:நாகை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் மீன்வளக்கல்லூரிகள் உள்ளதால், அப்பகுதிகளில் உள்ள மீனவர்களின் குழந்தைகள் இக்கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அந்த கல்லூரிகளில் படிக்கும் மீனவர்களின் குழந்தைகள் மூலமாக, மீனவர்களுக்கும், மீன்பிடி தொழில் குறித்து நவீன முறைகள் தெரிவதாலும், மதிப்புக்கூட்டி மீன்களை விற்பனை செய்யும் முறைகள் தெரிவதாலும், மீனவர்களின் வருவாய் அதிகரிக்கிறது.

மேலும் இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைப்பதால், அந்த மாணவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. நாகை, தூத்துக்குடிக்கு சென்று படிக்க முடியாததால், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் குழந்தைகள் பிளஸ் 2விற்கு பிறகு படிப்பையே நிறுத்தும் நிலை உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, மணமேல்குடி பகுதியில் தமிழ்நாடு அரசு மீன்வளக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments