ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! பெற்றோர்களே உஷார்..!



பெரம்பலூரில் உள்ள ஆலம்பாடி சாலையில் வசித்துவரும் தர்மராஜ்- சசிதேவி தம்பதியின் 4 வயது மகன் ரெங்கநாதன் என்பவன்தான் ஜெல்லி மிட்டாய்க்கு பலியானவன்..!

விளையாட்டுச் சிறுவனான ரெங்கநாதன் சனிக்கிழமை பிற்பகல் தின்பண்டம் கேட்டு தனது தாயிடம் அடம்பிடித்து அழுததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனது தாய் சசிதேவி தனது வீட்டருகில் உள்ள பலசரக்குக் கடையில் ஜெல்லி எனப்படும் இனிப்பு ஜெல்லி டப்பாவை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட தெரியாத சிறுவன், டப்பாவில் இருந்த ஜெல்லி முழுவதையும் அழுது கொண்டே வாயில் போட்டுள்ளான்.வழவழப்பு நிறைந்த ஜெல்லி உருண்டை சிறுவனின் தொண்டைக் குழிக்குள் சென்று அடைத்ததில் தாயின் கண்எதிரிலேயே சிறுவன் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தான்.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற சிறுவனின் தாய் சசிதேவி, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மகனைக் கொண்டு சென்றுள்ளார்.சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ரெங்கநாதன், மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக தெரிவித்ததால் பெற்றோர் கதறித் துடித்தனர்.

சிறுவன் ரெங்கநாதன் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாய் மூச்சுக் குழலில் அடைத்துக் கொண்டதால் சிறுவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பாசமாக வளர்த்த குழந்தை ஆசைப்பட்டு கேட்டதால், தாய் அன்புடன் வாங்கி கொடுத்த 10 ரூபாய் தின்பண்டம் சிறுவனின் உயிரை பறித்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், ஜங்க்-புட்ஸ், தரமில்லாத மிட்டாய் வகைகள் போன்றவற்றைக் கொடுத்து பழக்கப்படுத்துவதைக் கைவிட்டு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள், பயிறுவகைகளை கொடுத்து வந்தால் அது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

Post a Comment

0 Comments