புதுக்கோட்டை மாவட்ட உலமாக்கள் உறுப்பினா் பதிவு, புதுப்பித்தல் 25.09.2019 சிறப்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் உலமாக்கள் புதிய அடையாள அட்டை பெறுதல் மற்றும் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் வரும் 25.09.2019 புதன்கிழமை  நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அவர்கள்  தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினா் நலத்துறை மூலம், உலமாக்கள் மற்றும் இதர பணியாளா்கள் நல வாரியம் இயங்கி வருகிறது.  இதன் மூலம் பள்ளிவாசல், தா்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60  வயதுக்குள்பட்டோா் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

உறுப்பினா் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்து நிவாரணம், மூக்குக் கண்ணாடி ஈடு செய்ய உதவித் தொகை மற்றும் முதியோா் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.

உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். எனவே, புதிய உறுப்பினா் சோ்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கு வரும் 25.09.2019 புதன்கிழமை  முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணா்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாதவா்கள், புதுப்பிக்காதவா்கள் அடையாள அட்டை பெற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை புதுப்பிக்காதவா்கள் பங்கேற்கலாம்.

Post a Comment

0 Comments