தொண்டி கடற்கரையில் துறைமுகம் அமைந்தால் வளம் செழிக்கும்: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்



தொண்டி கடற்கரையில் துறைமுகம் அமைப்பதற்காக 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஜெட்டி பாலம் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் சேதமடைந்து வருகிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துறைமுகம் அமையும் என்ற எதிர்ப்பார்ப்பும் பொய்து போய் விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். இங்கு பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கிருந்து தினமும் டன் கணக்கில் மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கடற்கரை சுமார் 2 கி.மீட்டர் நீளம் உள்ளது. வரலாற்று காலங்களில் இங்கு கடல் வழி வாணிகம் நடந்ததாக கூறப்படுகிறது.

அரபு நாடுகளுடன் இருந்த தொடர்பையும், பர்மா உள்ளிட்ட நாடுகளுடன் இருந்த தொடர்பையும் இங்குள்ள  வீடுகள் பறைசாற்றுகின்றன.

அரேபிய குதிரைகளும், தேக்கு மரங்களும் இறக்குமதி செய்ததாகவும், சேர,சோழ, பாண்டியர் காலத்தில் இங்கு வணிகம் நடைபெற்றதாகவும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதை மையமாக வைத்து தற்போது தொண்டியில் துறைமுகம் அமைக்கலாம் என கடந்த 20 வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தொண்டி கடலில் சிறிய ஜெட்டி பாலம் ஒன்றும் கட்டப்பட்டது. கப்பலில் சரக்கு இறக்க வசதியாகவும், படகுகளை நிறுத்தம் செய்ய வசதியாகவும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டதில் இருந்து இங்கு துறைமுகம் அமைக்கும் திட்டம் றிறுத்தப்பட்டது. கடலில் ஆழம் குறைவு, போதிய வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கு துறைமுகம் அமைக்க தடை போடப்பட்டது. இது இப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இங்கு துறைமுகம் அமைப்பதன் மூலம் தொண்டி உட்பட சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் வேலை வாய்ப்பில் தன்னிறைவு ஏற்படும்.

மேலும் சரக்குகள் கொண்டு செல்வதன் மூலம் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களும் பயன்பெறும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு தொண்டியில் துறைமுகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்தால் அரசுக்கு வருவாயும், மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

 இதுகுறித்து தொண்டி சாதிக்பாட்சா கூறியது,

 ‘‘வறட்சியான மாவட்டத்தில் அரசு தொழிற்சாலை உள்ளிட்டவைகளை திறந்து வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் இதுநாள் வரையிலும் எவ்வித வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க வில்லை. அதனால் தொண்டியில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் தொண்டி, நம்புதாளை உட்பட சுற்றுவட்டார கிராமக்கள் உட்பட பல்வேறு மாவட்ட மக்களும் பயன் அடைவார்கள்.

உதாரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு கப்பலில் சரக்கு வந்தால் தொண்டி வழியாக செல்லும் போது சிவகங்கை மாவட்ட மக்களும் பயனடைவார்கள்.

போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பும் பெருகும். ஒரு காலத்தில் செல்வ செழிப்பாக இருந்த தொண்டி பகுதி கால மாற்றத்தின் காரணமாக இன்று வறுமையின் பிடியில் உள்ளது.

துறைமுகம் அமைவதன் மூலம் மீண்டும் இப்பகுதியில் வளம் செழிக்கும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments