அழகன்குளம் அகழாய்வில் கண்டெடுத்த பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. கோரிக்கைஅழகன்குளத்தில் நடந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 13 ஆயிரம் பொருட்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமம் வங்கக்கடலும், வைகை நதியும் சங்கமிக்கும் முகத்துவாரம் அமையப்பெற்ற ஊர். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1986–87–ம் ஆண்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமன் நாட்டு மதுக்குடுவைகள், கி.பி. 4–ம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானிய காசு, எலும்பினால் செய்யப்பட்ட சீப்பு, மோதிரம் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

 இவற்றை ஆய்வு செய்த போது அவை சுமார் 2 ஆயிரத்து 360 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்பு 1990–91, 1993–94, 1995–96, 1997 என பல்வேறு காலகட்டங்களில் இந்த அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பண்டைய தமிழ் எழுத்துக்கள், ஹரப்பா நாகரீக காலத்தில் இருந்த பகடைக்காய், சங்க கால பாண்டியர்கள் உருவம் பொறித்த செம்பு காசு, விலை உயர்ந்த கல்மணி நகைகள், சங்கு வளையல்கள், ரோமானிய நாட்டு கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட பொருட்கள், இரும்பு வாள், கட்டிடத்தின் தரைப்பகுதி போன்றவை கிடைத்தன. இதன் மூலம் ரோமானிய நாட்டுடன் அழகன்குளத்துக்கு இருந்த வணிக தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு அவை தற்போது எங்குள்ளது என்ற விவரங்கள் தெரியாத நிலை இருந்து வருகிறது. மேலும் இங்கு அகழாய்வு பணிகள் நடந்ததற்கான எவ்வித தடயங்களும் இல்லாமல் உள்ளது. இதனால் அழகன்குளம் வரும் சுற்றுலா பயணிகள், மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2016–17ம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது மிகவும் அதிகமாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் இதுவரை கிடைக்காத சிலுவை பொறித்த முத்திரை, இரும்பு பொருட்கள் தயாரிக்கும் கொல்லம்பட்டறை, சங்குகள், உறைகிணறு, தீட்டுக்கல் போன்றவை கிடைத்தன. இவை அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு காட்டப்படவில்லை.

இந்த நிலையில் அழகன்குளத்தில் அகழாய்வு நடைபெற்ற இடங்களை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 மண்டபம் ஒன்றியம் அழகன்குளத்தில் 1991 முதல் 8 கட்டங்களாக அகழாய்வு நடந்துள்ளது. அதன்படி அங்கு 13 ஆயிரத்திற்கு மேலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வைகை கரை நாகரீகத்திற்கு முன்னோடியாக வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகள், பானை ஓடுகள், வாள், கேடயம் என சங்க காலத்துக்குரிய பொருட்கள் அனைத்தும் அகழாய்வில் கிடைத்து உள்ளன.

தற்போது அழகன்குளத்தில் அகழாய்வு நடந்த இடமே அடையாளம் காண முடியாதபடி மூடப்பட்டு புதர் மண்டியுள்ளது. கீழடியை மிஞ்சும் வகையில் தமிழர்களின் தொன்மை நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த அழகன்குளம் அகழாய்வை தொடராதது ஏன் என்ற கேள்வியும் மக்களிடம் எழுகிறது.

எனவே அழகன்குளத்தில் மீட்டெடுக்கப்பட்ட பொருட்களை ராமநாதபுரம் மக்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்ட மக்களும் காணும் வகையில் அவற்றை காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அழகன்குளத்தில் மீண்டும் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மண்டபம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் ஊராட்சி தலைவர் அசோகன், ஜமாத் தலைவர் லுக்மான் ஹக்கீம், இந்து சமூக பிரமுகர் ராமமூர்த்தி, பாலமுரளி, முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் முகமது மன்சூர், அழகன்குளம் முஸ்லிம் சங்க தலைவர் சகுபர், செயலாளர் செய்யது இபுராகீம் உள்பட ஏராளமானோர் உடன் வந்தனர். ஆனந்தபுரம் கிராம மக்கள் சார்பில் மீனவர் சங்க தலைவர் பஞ்சாட்சரம் தங்கள் பகுதிக்கு சமுதாய கூடம் கட்டித்தரும்படி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments