புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.!பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதுகுறித்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

விவசாயிகளுக்கு வேளாண்மையில் நிலையான உற்பத்திக்கு துணை நின்றிடவும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-17ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

நடப்பு 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை சிறப்பு பருவமாக அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு 2019-20ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 762 வருவாய் கிராமங்கள் நெல் சம்பா பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டும் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2019-20ஆம் ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன்தொகை ஏக்கருக்கு ரூ.29,000மும், அரசாங்கத்தால் ஒப்பளிக்கப்பட்ட பிரிமீயம் தொகை ரூ.6380மும் (நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையில் 22மூ) ஆகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை 1.5 சதவீதம் மட்டுமே அதன்படி ஏக்கருக்கு ரூ.435 காப்பீட்டுக் கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரிமீயத் தொகை ரூ.5,945 ஐ மத்திய, மாநில அரசுகளால்
சரிபாதியாக பிரித்து செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பயிர் கடன்பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள்  மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் 15.12.2019 ஆகும். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், சிட்டா வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும். பின்பு பணம் செலுத்தியதற்கான ரசீதை தொடர்புடைய பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். எனவே விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விபரங்களை சரிபார்ப்பதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய அறிவுருத்தப்படுகிறது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். எனவே, சம்பா நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் விரைந்து பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments