புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையின் அவலம்..! 34 கி.மீ தூரத்துக்கு 56 வேகத்தடைகள்.!ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளி அடுத்தடுத்த வேகத்தடைகளால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதமாகி உயிரிழந்துபோகும் நிலை ஏற்படுகிறது.


அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் தினமும் அரசுப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்தச் சாலை வழியாகத்தான் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த நிலையில் தினமும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத இந்தச் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த வேகத்தடைகளால், வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர். குறிப்பாக, வாகனத்தை வேகமாக இயக்கி உயிரைக் காப்பாற்ற வேண்டிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வாகனங்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

விபத்துக்களைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் வேகத்தடைகள் இன்று பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ``34 கி.மீ தூரம் கொண்ட புதுக்கோட்டை-அறந்தாங்கி பிரதான சாலையில் 56 வேகத்தடைகள் இருக்கின்றன. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 4 வேகத்தடைகள் எதுக்குன்னுதான் தெரியலை. விபத்து நடந்த இடங்களில் எல்லாம் வேகத்தடைகள் என்ற பெயரில் விதிமுறைகளை மீறி ஏராளமான வேகத் தடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வேகத்தடைகள் அமைத்துக்கொண்டே வருகின்றனர். பேருந்தில் அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கு சுமார் 1.30 மணி நேரம் வரையிலும் கூட ஆகிவிடுகிறது.


இத்தனை வேகத்தடைகள் இல்லையென்றால், 1 மணி நேரத்திலேயே வந்துவிடலாம். நோயாளிகளின் நிலைதான் விபரீதமாகி விடுகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கே 45 நிமிடங்கள் வரையிலும் ஆகிவிடுகின்றன. இதனால், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளி, அடுத்தடுத்த வேகத்தடைகளால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதமாகி உயிரிழந்துபோகும் நிலை ஏற்படுகிறது. உயிரிழப்பைத் தடுக்க ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிற வேகத்தடைகள், இன்று பல உயிர்களைக் காவு வாங்குகின்றன. எனவே, இணைப்புச் சாலைகளைத் தவிர்த்து தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும்" என்றனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரிடம் கேட்டபோது, ``இந்தச் சாலையில் அடுத்தடுத்து வேகத்தடைகள் வருவதால், ஒரே வேகத்தில் சீராக வண்டியை ஓட்டி வரமுடியாது. வேகத்தடைகளில் ப்ரேக் அணைக்காமல் வந்தால், அது நோயாளிக்கு வேறு ஒரு பிரச்னையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸில் ஏற்றிவரப்படும், நோயாளியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் ஒவ்வொரு நிமிடமும் ரொம்பவே முக்கியமானது. எனவே, தேவையற்ற வேகத்தடைகளை அகற்றினால், சிரமமின்றி எங்களால் ஆம்புலன்ஸை இயக்க முடியும்" என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments