தன்னார்வலர்களின் சேவைக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!



தன்னார்வலர்களின் சேவைக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று காரணமாக, மத்திய அரசால் 21 நாள் ஊரடங்கு  அறிவிக்கப்பட்டு அந்த உத்தரவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் அந்த தடை உத்தரவை நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மருத்துவ வல்லுநர்களும் அத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மத்திய அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு உத்தரவு காரணமாக வட மாநிலங்களில் ஏழை மக்களும், தொழிலாளர்களும் பசிப் பட்டினியாலும், சோர்வுற்றும் வீதிகளில் செத்துமடியும் மனதைக் கலங்கவைக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழகத்தில் அத்தகைய சூழல் இல்லாததற்கு காரணம் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்துவரும் ஈடு இணையற்ற மனிதாபிமான நடவடிக்கைகளே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் அன்றாடங் காய்ச்சிகளான லட்சக்கணக்கான மக்கள் விழிபிதுங்கி நின்றபோது அவர்களுக்கு உடனடியாக கைகொடுத்தது  தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள்தான். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஏராளமானோர் இத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தானாக முன்வந்து தேவையுடைய மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை நேரடியாக அவர்களுக்கு விநியோகிக்க கூடாது என அரசு தடை உத்தரவு வெளியிட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்க கூடிய அதேவேளையில் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஏறக்குறைய 10 நாட்கள் கடந்த பின்னர் தான் தமிழக அரசு அறிவித்த ரூ.1000 உதவித்தொகையே மக்களிடம் சென்றடைந்தது. அதேபோல் அரசு அறிவித்த இலவச ரேசன் பொருட்களில் அரிசிசை தவிர வேறு எந்த பொருட்களும் பல இடங்களில் மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இத்தகைய நிலையில் அரசின் உதவித் திட்டங்களை எதிர்பார்த்து தான் மக்கள் இருக்க வேண்டும், வேறு எந்த உதவியையும் அவர்கள் பெறக்கூடாது என்றால் இன்றைய சூழலில் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை விட பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாயிருக்கும்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பானது  கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதும், அந்த நடவடிக்கையால் பொதுமக்கள் படும் இன்னல்களை, துன்பங்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் தெளிவாகின்றது.

மிகப்பெரும் பேரிடரை அரசு மட்டுமே எதிர்கொண்டு அதனை முறியடிப்பது என்பது இயலாத காரியம். சிவில் குழுக்களும் அதனுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே பேரிடரை எதிர்கொள்ள முடியும். கடந்தகால பேரிடர்களும் அதனைத் தான் நிரூபித்துள்ளன.

ஊரடங்கால் முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளவும், அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து தரவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உதவவும் அரசுதான் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அரசு தரும் நிவாரணங்களை மட்டும் தான் தன்னார்வலர்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தடை உத்தரவை பிறப்பிப்பது சர்வாதிகார போக்கின் அடையாளமாகும்.

தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர்களால் தான் தங்கள் பகுதி சார்ந்த தேவையுடைய மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையோ அல்லது நிதிகளையோ நேரடியாக விரைவாக தக்க சமயத்தில் கொண்டு செல்ல முடியும். ஆனால் அரசால் அதனை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம்.

அரசின் இந்த தடை உத்தரவில்  ஊரடங்கின் நோக்கத்தை தன்னார்வலர்கள் மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் தன்னார்வலர்கள் உணவுப் பொருட்களை காவல்துறை அனுமதியுடன் அவர்கள் முன்னிலையில் தான், சமூக இடைவெளியை கடைப்பிடித்து விநியோகிக்கின்றனர். ஆனால் எங்கோ ஓரிடத்தில் சிலரால் அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த தன்னார்வலர்களையும் குற்றப்படுத்தி, தன்னார்வலர்களின் மனிதாபிமான சேவைக்கு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த தடை உத்தரவால் தமிழக அரசு கொரோனா தடுப்புடன், பசி-பட்டினிக்கு எதிரான போரையும் சேர்த்து துவங்க வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆகவே, விதிமுறைக்கு உட்பட்டு செயல்படும் தன்னார்வலர்களுக்கு அனுமதி வழங்கி,  இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments