கட்டணம் 10 ரூபாய் போதும் – 3 மாத வாடகையே வேண்டாம்: நெகிழ வைத்த பட்டுக்கோட்டை டாக்டர்!கொரோனா காலத்தில் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் பட்டுக்கோட்டை டாக்டர் கூறிய வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது.


பட்டுக்கோட்டையில் டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கொரோனா லாக்டெளனால் கடைகள் திறக்காமல் போனதில் வருமானம் இல்லாமல் தவித்ததைக் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய தெருவில் கிளினிக் நடத்தி வருபவர் மூத்த டாக்டர் கனகரத்தினம். இவருக்கு வயது 91. மகப்பேறு மருத்துவரான இவரை எல்லோரும் ரத்தினம் என அன்போடு அழைக்கின்றனர். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா சுவாமிநாதன் ஆகியோரும் டாக்டராக உள்ளனர்.


இந்த நிலையில், தனது கிளினிக் அமைந்துள்ள இடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார் ரத்தினம். இதில் துணிக்கடை, காலணிகள் உள்ளிட்ட கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் வருமானம் இழந்து தவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடைகளின் உரிமையாளர்கள், டாக்டரிடம் ஒரு மாத வாடகை பணத்தை குறைத்துக் கொண்டு இரண்டு மாத வாடகை பணத்தை மட்டும் தருகிறோமலென கேட்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இதனை முன்கூட்டியே அறிந்த டாக்டர் ரெத்தினம் வியாபாரிகளை தொடர்புகொண்டு, `ஒரு மாதமில்லை மூன்று மாதமும் அனைவரும் கொடுக்க வேண்டிய வாடகை பணத்தை தர வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதன் மொத்த தொகை 4 லட்சத்து 20,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கேட்ட வியாபாரிகளுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

டாக்டர் ரெத்தினம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுவதுதான் அதைவிட அதிர்ச்சி, ” இன்று வரை டாக்டர் ரெத்தினம் சிகிச்சைக்காக வாங்கு ஃபீஸ் வெறும் 10 ரூபாய்தான். . மகப்பேறு மருத்துவரான அவர் தற்போது வரை 65,000 பிரசவம் பார்த்திருக்கிறார். இதில் பெரும்பாலும் சுகப்பிரசவம்தான்

தன்னிடம் வரும் அனைவரையும் உறவாக நினைத்து அன்பாக அக்கறையாக சிகிச்சையளிப்பார். 91 வயதிலும் உடலில் எந்த குறைகளும் இல்லாமல் தன் வேலைகளைத் தானே செய்யக் கூடிய வகையில் ஆரோக்கியமாக இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் வழியில் வந்த அவரின் மகனும் மருமகளும் 50 ரூபாய் பீஸ் வாங்குகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments