தங்கம் விலை பவுனுக்கு ரூ.984 குறைந்தது.. ஒரு பவுன் ரூ.41,936-க்கு விற்பனை.!தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் இறுதியில் ரூ.37 ஆயிரம், ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம் என படிப்படியாக ரூ.40 ஆயிரத்தை கடந்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் விலை உயர்ந்தே காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, விலை சற்று குறையத் தொடங்கியது. 

கடந்த 8-ந்தேதி பவுனுக்கு ரூ.248-ம், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.160-ம் சரிந்து ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்தது.

நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 365-க்கும், பவுன் ரூ.42 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருந்தது. 

கிராமுக்கு ரூ.123-ம், பவுனுக்கு ரூ.984-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 242-க்கும், பவுனுக்கு ரூ.41 ஆயிரத்து 936-க்கும் விற்பனை ஆனது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,392 குறைந்து இருக்கிறது.

வழக்கமாக தங்கம் விலை உயரும்போதும், குறையும்போதும் வெள்ளி விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் கடந்த 8-ந்தேதியில் இருந்து வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. 

இந்தநிலையில் நேற்று அதன் விலையும் சற்று குறைந்திருந்தது. கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் குறைந்து, ஒரு கிராம் 82 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

Post a comment

0 Comments