ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த ! - பணியாளர்களுக்குக் குவியும் பாராட்டுபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் தனவேல். இவர் மனைவி சுதாராணி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாராணி பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். சுதாராணியை இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

அன்னவாசல் - புதுக்கோட்டை பிரதான சாலையில் கட்டியாவயல் என்னும் இடத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது சுதாராணி பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் ஒட்டுநர் தேவபாஸ்கரன் இருவரும் ஆம்புலன்ஸிலேயே வைத்து சுதாராணிக்குப் பிரசவம் பார்த்தனர். பின்னர், சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்.


மருத்துவ கண்காணிப்புக்காக, தாய் சுதாராணியையும் குழந்தையையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த இருவாரங்களுக்கு முன்பு இருவரும் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே வைத்து பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்திருந்தது. தொடர்ந்து, இருவரும் ஏராளமான சுகப்பிரசவங்களை ஆம்புலன்ஸிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.

இதுகுறித்து ஓட்டுநர் தேவபாஸ்கரன் கூறுகையில், ``பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு வேறுவழியின்றி ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது. தாயும் சேயும் தற்போது நலமுடன் உள்ளனர்" என்றார்.

Post a comment

0 Comments