புதுக்கோட்டையில் : `ஆன்லைன் வகுப்பு; கலங்கிய குடும்பம்!’ - இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்



உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொற்று பரவலின் தீவிரம் கருதிக் கடந்த மார்ச் மாத துவக்கத்திலேயே பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று வரையிலும் பள்ளிக் கல்லூரிகளைத் திறக்க முடியாத நிலை தான் உள்ளது. இந்த நிலையில் தான், அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்பு நடைமுறையை ஆரம்பித்துவிட்டனர். ஆன்லைன் கிளாஸ்க்கு ஆண்ட்ராய்டு செல்போன் கிடைக்காமல் பல மாணவர்கள் அல்லாடுகின்றனர்.

புதுக்கோட்டையில் உள்ள தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் கிளாஸ் நடைமுறை துவங்கியுள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் கார்த்திகா என்ற மாணவியைத் தவிர அனைத்து மாணவிகளும் ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி ஆசிரியை, கார்த்திகாவின் தேவை குறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஹமீது என்பவரிடம் கூற, அவர் தன் நண்பர்களிடம் அதனைக் கூறியுள்ளார். அடுத்த நாளே அனைவரும் சேர்ந்து தங்களது பங்களிப்பில் மாணவிக்கு புதிய ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கிக்கொடுத்து மாணவி மற்றும் மாணவியின் பெற்றோருக்கும் இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர்.

இதுபற்றி ஹமீதுவிடம் கேட்டபோது, "தூயமரியன்னை மேல் நிலைப்பள்ளியில் தான் என் பிள்ளையும் படிக்கிது. பிள்ளைக்கு என்கிட்ட இருந்த மொபைலைக் கொடுத்திட்டேன். இந்த நேரத்துல தான், ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் இல்லைங்கிறதால, பிள்ளைகள் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு கேள்விப்படும்போது மனசுக்கு ரொம்பவே ரணமாக இருக்குது. கஷ்டப்படுகிறவங்களுக்கு எங்க நண்பர்கள் சேர்ந்து ஓயாத அலைகள் என்ற பெயரில் எங்களால முடிஞ்ச உதவிகள் செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

இந்த பிள்ளைகளுக்கும் பிள்ளைகளுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்னு தான் நாங்க நெனச்சுக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல தான், "காயத்திரி கஷ்டப்படுகிற குடும்பம், அவளால செல்போன் வாங்க முடியலை, நீங்க கொஞ்சம் உதவ முடியுமான்னு" சொல்லி ஸ்கூல் டீச்சர்கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சு. உடனே அருண்மொழி அண்ணன்கிட்ட சொன்னேன்.

அவரும் உடனே வாங்கிக்கொடுத்துடுவோம்னு சொன்னார். சில மணி நேரங்கள்லயே நானும் கண்ணன் சாரும் வாங்கிக்கொண்டுபோய் அந்த மாணவிக்கிட்ட கொடுத்தோம். அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ஒரு மாணவிக்குப் படிப்புக்கு உதவியதில் எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். தொடர்ச்சியாக இதுபோன்ற கஷ்டப்படுற மாணவ, மாணவிகளுக்கு உதவணும்" என்றார்.

இதுபற்றி மாணவியின் தாய் சீதா கூறும்போது, ``3 பிள்ளைகள். கூலி வேலை செய்து தான் பிள்ளைகளைக் காப்பாற்றிக்கிட்டு வர்றேன். கொரோனாவால் வீட்டுக்காரருக்கு வேலை இல்லை. இந்த நேரத்துல சாப்பாட்டுக்கே சிரமம் தான். செல்போனை எப்படி வாங்க முடியும். எவ்வளவு சிரமம் வந்தாலும், பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருவோம். இப்போ செல்போன் வாங்கிக்கொடுத்தால் தான் பொண்ணு படிக்கவே முடியும்னு டீச்சர் சொன்னாங்க. செல்போன் எப்படி வாங்கிக்கொடுக்கப்போகிறோம்னு தெரியாமல் அல்லாடிக்கிட்டு கிடந்தேன். ஆனால், கடவுள் மாதிரி இந்தத் தம்பிங்க வாங்கிக்கொடுத்திட்டாங்க. அவங்க செஞ்ச உதவியை நானும், என் பெண்ணும் என்னைக்கும் மறக்கமாட்டோம்" என்றார்.

Post a Comment

0 Comments