18 - 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் போனால் தடுப்பூசி கிடையாது - மத்திய அரசு




18 - 45 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அந்த வயதினர் நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள எந்த வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் 3வது கட்ட தடுப்பூசி பணிகளை தொடங்குது தொடர்பான வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இதுவரை முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுகொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மே.1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரும் 28ம் தேதி முதல் கோவின் வலைதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மே.1ம் தேதி முதல் தனியார் மருத்துவமனைக்கான தடுப்பூசி விலைகள் உயர்கின்றன.

இதனிடையே, தனியார் தடுப்பூசி மையங்கள் ஏப்.30ம் தேதி வரை பயன்படுத்தாமல் மீதம் வைத்துள்ள தடுப்பூசிகளை எங்கிருந்து பெறப்பட்டதோ அதே இடத்திற்கு மீண்டும் திரும்பி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும்படி, ஒவ்வொரு தனியார் தடுப்பூசி மையமும், கோவின் வலைதளத்தில் தடுப்பூசி வகையையும், இருப்பு எண்ணிக்கையையும், விலையையும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்து வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மாநில அரசுகளுக்கு ரூ.600க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200க்கும் விற்பனை செய்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments