புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்!



புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் 508 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

தொற்று குறைந்திருந்த போது கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி இந்த சிகிச்சை மையம் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மீண்டும் அதே வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்து மையத்தில் படுக்கை வசதிகளை பார்வையிட்டனர்.

அதன்பின் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதியில் 450 படுக்கைகள் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிகிச்சை வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 75 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பாரம்பரியமான உணவு முறைகளிலும், சித்த வைத்திய முறையிலும் குணப்படுத்த முடியும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக உணவு வழங்க ரூ.9 லட்சம் டீனிடம் வழங்கப்பட்டுள்ளது. சூப், பால், முட்டை போன்ற ஆரோக்கிய உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், "சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 2 நாளைக்குள் தேவையான ஆக்சிஜன் அளவை விட கூடுதல் அளவு நமக்கு கிடைக்கும். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி விட்டனர். தமிழக்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருவார்'' என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னையன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மாமுண்டி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments