புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு : அசத்தல் அறிவிப்பு


புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் உரையில், பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.அதில் ஒரு திட்டம் ரேஷன் கார்டு தொடர்பானது.

புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து விட்டு அது எப்போது வருமோ என காத்திருக்க தேவையில்லை. அரசு தனது நலத் திட்டங்களை ரேஷன் கார்டு வழியாக செய்து வருகிறது.

சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர்,பெருந்தொற்றுப் பரவல் சூழலில் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ள இந்த அரசு, மாநிலத்திலுள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகையை இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய் நிதியுதவியை மே, ஜூன் மாதங்களில் வழங்கியுள்ளது. உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் பலரும், பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இப்பேரிடர் காலத்தில்  ஏழை எளியோருக்கு நேரடி நிவாரணத் தொகை வழங்குவதே சரியான நடவடிக்கை என வலியுறுத்திவரும் நிலையில்,  அதை ஒட்டியே தமிழக அரசும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது.

நுகர்வோர் தேவையை ஊக்குவிக்கவும், பொருளாதார சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பிடவும் இது உதவும்.
இது தவிர, 466 ரூபாய் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், 977.11 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மே, ஜூன் மாதங்களுக்கு, மாநிலத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசிற்கு கூடுதலாக 687.84 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை மனதிற்கொண்டு செயல்படும் இந்த அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10,068 கோடி ரூபாயை இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கி உள்ளது.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும். குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கப்படும். கடந்த 2007ம் ஆண்டு, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு கணிசமான அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது,என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments