புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 4 மாத குழந்தை பலி






புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 4 மாத குழந்தை பலி

கொரோனா வைரசுக்கு புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

இதுவரை 25,665 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில வாரங்களாக தினசரி உயிரிழப்பு 450-ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர் அதிகம் பலியாகி வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள மந்த குடிப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 4 மாத குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை கடந்த மாதம் 27-ந்தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தையை பரிசோதித்ததில் 29-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மிகக்குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments