மீமிசல் அருகே பெற்றோர் மரணம் - அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் 4 சிறுவர்கள்!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே செய்யானத்தில் தாய் தந்தையை இழந்த நான்கு சிறுவர்கள் புதுக்கோட்டை ஆட்சியரை சந்தித்து தங்களுக்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை மனு விடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள செய்யானம் கிராமத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்துவந்த சந்திரசேகரன்-வனிதா தம்பதியினருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், அவர்களுக்கு அரிகரன் (16), அஜய் (14), அஜித் குமார் (13) அகிலன் (8) ஆகிய நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நான்கு குழந்தைகளையும் ஆசையாசையாய் அரவணைத்து வளர்த்து வந்த தாய் வனிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் நான்கு சிறுவர்களும் தாயை இழந்து பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து மனைவி இறந்த துயரத்தில் மனநலம் பாதித்தது போலிருந்த சந்திரசேகரனும் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். தாய் தந்தையை இழந்து ஆதரவுக்கு யாருமின்றி அந்த நான்கு சிறுவர்களும், அவர்களது பாட்டி புஷ்பம் வீட்டில் உணவுக்கே வழியின்றி தினம்தினம் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
ஒருபுறம் அன்பு காட்ட யாரும் இல்லாத நிலையில், மறுபுறம் வயிற்றைக் கழுவ வழியின்றி பரிதவித்த அந்த 4 சிறுவர்கள் நேற்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கவிதா ராமு அரசு சார்பில் உதவிகளை செய்வதாக வாக்குறுதியும் அளித்துள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியை மனதில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அந்த நான்கு சிறுவர்களும் அரசு நமக்கு ஏதும் உதவிகளை செய்யும் என்ற ஏக்கத்தோடு மீண்டும் வீடு திரும்பிய நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்தது.
தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்கு உரிய உதவிகளை அரசு செய்யும் என தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகளின் கடைக்கண் பார்வை அநாதையாக நிற்கும் இந்த நான்கு சிறுவர்கள் மீதும் விழுந்து இவர்களுக்கு தேவையான கல்வி, உணவு, உடை, வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எவரேனும் முன்வரவேண்டும் என்பதே இந்த சிறுவர்களின் நிலையை கண்டவர்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது.

நன்றி:புதியதலைமுறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments