அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி வகுப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதம் நிறைவடைந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் உரை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு காரணமாக பிளஸ்-2 தேர்வை நடத்தலாமா?, வேண்டாமா? என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நேரத்தில், முதல்-அமைச்சரிடம் இருந்து போன் வந்தது. அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களையும் அழைத்து கருத்து கேட்க வேண்டும் என்றார். அதன்படி, கருத்துகள் கேட்கப்பட்டது.

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கியபோதே, முதல்-அமைச்சர் என்னிடம், இது மக்கள் வரிப்பணம், முழுவதையும் நல்லவிதமாக செலவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 58 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 30 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதாவது தமிழக மக்கள்தொகையில் 6-ல் ஒருவர் பள்ளி மாணவராக உள்ளனர். அமைச்சராக பதவியேற்ற மறுநாளே மே 8-ந் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, நான் சென்று ஆய்வு செய்தேன். ஆசியாவின் 2-வது பெரிய நூலகம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகம் சின்னாபின்னமாக இருந்தது. அதை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கற்றல் திறனில் தமிழகம் 23-வது இடத்தில் உள்ளது. 10 இடங்களுக்குள் கொண்டுவர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 16 சதவீதமாக உள்ளது. அதை 5 சதவீதமாக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனாவினால் மாணவர்கள் 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு கற்றல் திறன் குறைந்திருக்கிறது. அதை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பள்ளி கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 9 முறை மாற்றப்பட்டுள்ளார். இசை நாற்காலி விளையாட்டு போல் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பள்ளி கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தையே காணவில்லை. அதை மீட்டெடுக்க வேண்டும்.

மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கு ரூ.90 கோடி வரை செலவாகும் என்று தெரிகிறது. இந்த நூலகத்தில் நவீன வசதிகள் செய்யப்பட இருக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வாங்கி வைக்கப்பட்ட புத்தக பைகளில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் 2 பேரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க கட்சியினர் என்னிடம் வலியுறுத்தினர்.

முதல்-அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றபோது, அதற்கான செலவு ரூ.13 கோடி ஆகும் என தெரிந்தவுடன், அந்த படம் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று முதல்-அமைச்சர் கூறிவிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments