கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக குடிநீருக்காக தவிக்கும் 7-வது வார்டு பொதுமக்கள்! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!



கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக குடிநீருக்காக பழைய காலனி பகுதி 7-வது வார்டு பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பழைய காலனி தெருவில் உள்ள ஒரு வீதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுவும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றனர். 

மேலும் கடந்த ஒன்றறை வருடங்களுக்கு மேலாக குடிநீர் வசதி இல்லாமல் அடுத்த வீதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டி பலமுறை வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

இதுகுறித்து 7-வது வார்டு உறுப்பினர் கூறுகையில் எனது வார்டில் உள்ள ஒரு வீதியில் குடிநீர் பைப் வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டி வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் எனது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கடந்த 15.03.2021 அன்று ஊராட்சி மன்ற செயலாளரிடம் மனுவாக அளித்தேன். மேலும் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். ஆனால் இதுவரை ஊராட்சி மன்ற தலைவியோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் ஆனால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
 
மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டி அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற செயலாளர் 7-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது விரைவில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தண்ணீருக்காக தவித்து வரும் அப்பகுதி மக்களின் கஷ்டங்களை போக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு ஊராட்சியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது ஒரு ஊராட்சியின் கட்டாய கடமையாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments