கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் திடீரென வேரோடு மண்ணில் சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை நட்ட இளைஞர்கள்!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் திடீரென வேரோடு மண்ணில் சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை, அவுலியா நகர் இளைஞர்கள் மீண்டும் அதே இடத்தில் நட்டனர்.

காலங்காலமாக தங்களுக்கு நிழல்கொடுத்து வந்ததோடு, பறவையினங்களுக்கு வாழ்விடத்தையும் வழங்கிய மரம் வேரோடு சாய்ந்து கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்களும், இளைஞர்களும் வேதனை அடைந்தார்கள். அதனை மீண்டும் துளிர்விடச்செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இதற்காக 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, சாய்ந்த ஆல மரத்தின் அனைத்து கிளைகளையும், மரம் அறுக்கும் எந்திரம், அரிவாள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் வெட்டி அகற்றினார்கள். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆல மரம் இருந்த இடத்தில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினார்கள். பின்னர் அந்த பள்ளத்தில், 2 பொக்லைன் உதவியுடன் கிளைகள் அகற்றப்பட்ட ஆலமரத்தின் அடிப் பகுதியை தூக்கி நிறுத்தினார்கள். அதன்பிறகு ஆலமரத்தை ஒரு பொக்லைன் பிடித்துக் கொள்ள இன்னொரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்போட்டு மூடப்பட்டது. கடும் முயற்சியால் ஆலமரம் மறுபடியும் தூக்கி நிறுத்தப்பட்டது.மேலும் சாய்ந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி அதன் அருகில் நடப்பட்டுள்ளது.

பழமையான இந்த மரத்தை மீட்டெடுக்க முடிவு செய்த கிராம மக்கள், சொந்த செலவில் இரண்டு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நடும் பணிகளில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஆலமரம் நிமிர்த்தப்பட்டு, மண்ணில் நட்டு வைக்கப்பட்டது. ஆலமரத்தை உயிர்ப்பிக்க, அவர்கள் GPM அவுலியா நகர் பள்ளிவாசல் ஆயிரம் ரூபாயை செலவு செய்துள்ளனர்.

அவுலியா நகர் இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து இந்த ஆலமரத்துக்கு தண்ணீர் ஊற்றி தழைக்கச்செய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments