புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.22 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் மீட்பு! உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன்!புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.22 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அதனை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் ஏட்டுகள் பிரபுராஜா, சரவணக்குமார், சியாமளன் ஆகிய போலீசார் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன், சிம்கார்டுகளின் எண், செல்போனின் ஐ.எம்.இ.எண் ஆகியவற்றை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் அடிப்படையில் 110 செல்போன்கள் மீட்கப்பட்டன. 

இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.22 லட்சம் மதிப்பிலான திருட்டுப்போன செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
பின்னர், போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் கண்டுபிடிக்கப்படும். திருட்டு செல்போன்களை வாங்கி பயன்படுத்திய சிலர் தாமாக முன்வந்து போலீசாரிடம் கொடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். மேலும் தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments