குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி: புதுக்கோட்டை உள்பட 12 கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்'



குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை உள்பட 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. அந்தவகையில் விழுப்புரம், திருப்பத்தூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய இடங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 தினங்களை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி (புதன்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 34 செ.மீ. மழை பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் இயல்பை விட 74 சதவீதம் அதிகமாக 60 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments