பரமக்குடி அருகே அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது மற்றொரு ஆசிரியருக்கு வலைவீச்சு
பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த 7-ந் தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவ்வாறு பாதிக்கப்பட்டு இருந்தால் அதுசம்பந்தமாக புகார் அளிப்பது குறித்தும் சைல்டுலைன் அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் அந்த பள்ளிக்கூட மாணவிகளிடம் தனித்தனியாக இதுசம்பந்தமாக கருத்து கேட்ட போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர், தங்களுக்கும் பாலியல் தொல்லை வருவதாக தெரிவித்தனர்.

2 ஆசிரியர் மீது புகார்

அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, அந்தப் பள்ளியில் பணியாற்றிவரும் கணித ஆசிரியரான பரமக்குடி மணிநகர் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் வளவன் பாபு, சமூக அறிவியல் ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா சேதுராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜா (வயது39) என்பவரும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்பு அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பாலியல் தொந்தரவு செய்வது என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

13 மாணவிகள்

அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அதிகாரிகள் வந்து பள்ளிக்கு நேரடியாக வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் 13 மாணவிகளுக்கு மேற்கண்ட 2 ஆசிரியர்களும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.

ஒருவர் கைது

பின்னர் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் வசந்தகுமார், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி 2 ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தார்.

இதைதொடர்ந்து ஆசிரியர் ராமராஜாவை மதுரையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஆல்பர்ட் வளவன் பாபுவை தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments