ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கண்டித்து வடகாட்டில் கிராம மக்கள் சாலை மறியல்




அனவயல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கண்டித்து வடகாட்டில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்டிடத்துக்கு பூட்டு...

வடகாடு அருகேயுள்ள அனவயல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் புஷ்பராணி (வயது 45). இவரது கணவர் சின்னத்துரை (50). இவர் அனவயல் எல்.என்.புரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை பூட்டி சாவியை வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சாவியை தருமாறு கிராம மக்கள் கேட்டதற்கு அவர் தர மறுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் வடகாடு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது.

கிராம மக்கள் மறியல்

இதனைதொடர்ந்து நேற்று மாலை இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அனவயல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சின்னத்துரை கிராம மக்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் வடகாடு போலீஸ் நிலையம் அருகே புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments