டிசம்பர் 26 சுனாமி தாக்கியதன் நினைவு தினம்: சுனாமி ஏற்பட்ட போது கோபாலப்பட்டிணம் கடற்கரையில் நடந்த சம்பவம் என்ன?



"அலைகள் ஓய்வதில்லை. அதற்கு ஓய்வும் இல்லை" என்பது எல்லோருக்கும் தெரியும். காலாகாலமாக கடலோரம் வசிக்கும் மீனவர்களின் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சங்கீதமே அலைகளின் ஓசைதான்.

இசைக்க தெரிந்த அலைகளுக்கு இம்சிக்கவும் தெரியும் என்பதை உணர்த்திய ஆண்டு 2004, 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சகதி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி 14 நாடுகளில் கடலோர பகுதிகளுக்குள் புகுந்தது.

சுமாா் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று டிசம்பர் 26 உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலகத்தையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை தமிழகத்தையும் சூறையாடியது. அதன் ஒரு பகுதியாக கோபாலப்பட்டிணத்தில் இதற்கு முன் எந்த தலைமுறையும் கண்டிராத இராட்சத அலை வீசியது. இதன் காரணமாக ஆலமரம் வரை கடல் நீர் புகுந்தது.பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும் அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் சில மீனவர்களுக்கு புதிய சுனாமி காலனி வீடுகள் அரசு மூலம் கட்டிக்கொடுக்கப்பட்டது.

2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 9.15 மணியளவில் 2 முறை சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியதில் சென்னை மற்றும் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வசித்து வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.

இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே அதிகாலை சுமாா் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாிந்தன. ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது. ஆய்வாளா்கள் 10 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தொிவித்தனா்.

சுனாமி தாக்கியதில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் போ் பரிதாபமாக உயிரிழந்தனர்.திடீரென தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் நிலை குலைந்துபோன மக்களுக்கு, “என்னவோ உலகமே அழிகிறதோ?' என்று எண்ணும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தியா, இந்தோனேசியா, இலங்கை,மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட? 14 நாடுகளில் கரையோரம் வசித்த மக்களை வாரி சுருட்டியது. இந்த எதிர்பாராத பேரிடரில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியானார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமியின் கோர தாண்டவம் அரங்கேறியது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேல் மாண்டுபோனார்கள். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிர் நீத்தனர். அன்று. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் கதறல், 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்னமும் கடற்கரையோரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

17 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது சுனாமி இந்திய கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. தற்போது உள்ள நவீன கருவிகள் அப்போது இருந்திருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பற்றியிருக்கலாம்.

சுனாமி ஏற்பட்டபோது கோபாலப்பட்டிணத்தில் நடந்த சம்பவத்தை முகம்மது அசாருதீன் கூறுகையில்,

2004-ஆம் ஆண்டு 26ம் தேதி காலை நேரத்தில் நாங்கள் நண்பர்களுடன் கடற்கரை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது விளையாட்டு மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் அனைத்தும் ஆலமரத்தை நோக்கி வேகமாக வந்தது. சிறிது நேரத்தில் கடற்கரையில் பெரிய அலை ஏற்பட்டது. இது போன்று பெரிய அலையை இதற்க்கு முன்னர் நமது ஊர் கடற்கரையில் பார்த்ததேயில்லை. அப்பொழுது கடல் நீர் மளமளவென கரையை நோக்கி வந்தது. சிறிது நேரத்தில் விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீர் வந்தது. அதன் பிறகு டீவியில் பார்த்து தான் தெரிந்தது சுனாமி என்று, சுனாமி ஏற்பட்டு கடல் தண்ணீர்  வந்து எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக மாறி இருந்த நிலையில் அதில் நடந்து சென்றோம்.

நம்ம ஊருக்கு சுனாமி வந்த போது ஊர் மக்கள் அனைவரும் கடற்கரை நோக்கி படையெடுத்தனர். மேலும் அதன் பிறகு இளைஞர்கள், பெரியவர்கள் கடல் முகப்பில் பாங்கு சொல்லி பிராத்தனை செய்தனர்.

ஆக்ரோஷமாக வெளியே வந்த கடல் நீர் சிறிது நேரத்தில் வேகமாக உள்வாங்க தொடங்கியது. சுமார் 500 மீட்டர் அளவில் திடீர் என கடல் நீர் உள்வாங்கியது. இதனால் மீன்கள் அனைத்தும் அப்படியே நிலப்பகுதியில் துடித்து கொண்டிருந்தன. கரையில் நின்ற இளைஞர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று அங்கு கிடந்த மீன்களை பிடித்து கொண்டிருந்தோம். இதில் குறிப்பாக சிகப்பு கலர் கடல் குதிரை மீன் பிடித்தோம். பிறகு சிறிது நேரத்தில் திரும்பவும் கடல் நீர் கரையை நோக்கி வந்தது. இதனையடுத்து இளைஞர்கள் அனைவரும் கரையை நோக்கி வேகமாக வந்தோம். இவ்வாறாக சுனாமி ஏற்பட்ட நாள் கோபாலப்பட்டிணம் கடற்கரை காட்சியளித்தது.

ஒவ்வொருவரின் மனதில் ஏற்பட்ட காயத்திற்கான மருந்து காலத்திடம் மட்டுமே இருக்கிறது என்றாலும், அந்த காலத்தாலும் அழிக்க முடியாத வடுவைசுனாமி ஏற்படுத்தி சென்றுவிட்டது. இனியும் இதுபோன்றகோர நிகழ்வு ஏற்பட வேண்டாம் என்பதே எல்லோருடைய வேண்டுதலாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments