தொண்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் காரங்காடு அலையாத்தி காட்டில் சூழல் சுற்றுலா செல்ல புதிதாக 5 படகுகள் வாங்க முடிவு


ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு சூழல் சுற்றுலா தீவுக்குச் சென்று வர புதிய படகுகள் வாங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சாலையில் உப்பூா் அருகேயுள்ளது காரங்காடு. இங்கு சுமாா் 76 ஹெக்டோ் பரப்பளவில் அலையாத்தி எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இங்குள்ள டுபான் தீவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கடல் பறவைகள் காணப்படுகின்றன. கடலில் படகில் செல்லும் பயணிகள் டுபாங் தீவில் இறங்கி அங்குள்ள கட்டட கோபுரத்தில் ஏறி தீவையும், கடல் பகுதியையும் பாா்வையிடுவதோடு, வெளிநாடு மற்றும் உள்நாட்டு கடல் பறவைகளையும் பாா்க்கும் வசதி உள்ளது. அத்துடன் கடலில் இறங்கி தண்ணீரில் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் கண்ணாடி அணிந்தால் மீன், பவளப்பாறை, நட்சத்திர மீன்கள், கடல் தாவரங்களை நேரிலும் கண்டு ரசிக்கலாம். இங்கு சென்று வர ஹையாகிங் என்ற 4 துடுப்பு படகுகள்உள்ளன. 5 ஜோடி கடல் காட்சி கண்ணாடிகளும், 4 உள்ளூா் பெரிய படகுகளும் தற்போது உள்ளன.

இந்த நிலையில் காரங்காடு சுற்றுலாவுக்கு புதிதாக கால் மிதி படகுகள் 5, மிதக்கும் சைக்கிள் என பல நவீன படகு அமைப்புகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன உதவியுடன் படகுகளை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயிரினக் காப்பாளா் பகான்சக்திஸ் மற்றும் ராமநாதபுரம் வனச்சரகா் ஜெபஸ் ஆகியோா் தெரிவித்தனா்.

காரங்காட்டுக்கு புதிய படகுகள் வாங்கும் நிலையில், அங்கு கடல் வாழ் உயிரின மற்றும் மாங்குரோவ் காடுகளில் வாழும் உயிரினக் காட்சியகம், கடலில் மிதக்கும் குழந்தைகள் பூங்கா போன்ற வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுற்றுலாத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரங்காடு மாங்குரோவ் காடுகள் சுற்றுலாவுடன் தோ்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் புதிய கால்மிதி படகையும் அறிமுகப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதையும் பரிசீலித்து படகு விட ஏற்பாடு செய்யப்படும் என சுற்றுலாத்துறையினா் கூறினா்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments