புதுக்கோட்டையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்






புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் மற்றும் நடத்தைவிதி கள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்   மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன்  29.01.2022 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். பின்னர்  கலெக்டர் தெரிவித்ததாவது;

புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளிலும்,  8 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 2 நகராட்சிகளில் 69 வார்டுகளுக்கும்,  8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 120 வார்டுகள் என மொத்தம் 189 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலை சுமுகமாகவும், எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையுமின்றி நடத்திடும் வகையில் 30 பறக்கும் படைகளும்,  10 இடங்களில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு சட்டவிரோதமான செயல்கள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இத்தேர்தல் காலத்தில் ரூ.50,000 க்கும் மேற்பட்ட தொகைகள் எடுத்தும்செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். 2 நகராட்சிகளில் 25 வாக்குப்பதிவு மையங்களும்,  8 பேரூராட்சிகளில் 20 வாக்குப்பதிவு மையங்கள் என 45 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, மேற்கண்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் அனைத்து வகையான தேர்தல் நடவடிக்கைகளும் சி.சி.டி.வி கேமரா மூலம் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக  அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கே.கே.சி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன்  மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments