தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் இரு பிரிவாக ஆர்ப்பாட்டம்கறம்பக்குடியில் பரபரப்பு


கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பிரிவாக தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலராக இருந்த அண்ணாத்துரை சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் நிர்வாக ரீதியில் கோட்டாட்சி தலைவரின் நடவடிக்கைக்கு தாசில்தாரை பொறுப்பாக்க கூடாது என கூறி ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினரிடம் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கறம்பக்குடி வட்ட கிளையின் சார்பில் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், கறம்பக்குடி தாசில்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மற்றொரு ஆர்ப்பாட்டம்

இதேவேளையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மற்றொரு பிரிவினர் கிராம நிர்வாக அலுவலர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலசந்தரை பொறுப்பு அலுவலராக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

ஒரே நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆதரவு, எதிர்ப்பு என 2 பிரிவாக ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments