பட்டுக்கோட்டை ரெயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ரெயில்வே துறைக்கு வழங்கிய நிலத்துக்கு உடனே இழப்பீட்டுத் தொகை வழங்க கலெக்டருக்கு உரிமையாளர்கள் கோரிக்கை


ரெயில்வே துறைக்கு வழங்கிய நிலத்துக்கு உடனே இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம், திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் அமைந்துள்ளது. 2012-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்காக இந்த தடத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக மூன்று ரயில் பாதைகள், சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு ரெயில் பாதை, இருப்புப்பாதை பராமரிப்பு எந்திரத்தை (டிராக் மெஷின்) நிறுத்த ஓர் ரெயில் பாதை ஆக மொத்தம் 5 ரெயில் பாதைகள் அமைக்க திட்டமிட்டபட்டு பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.

மேலும் வருங்காலத்தில் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை- மன்னார்குடி புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பொருட்டு தேவையான ரெயில் பாதைகளும் முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ரெயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் போதிய நிலம் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள 
11 நபர்களிடமிருந்தும் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான 
இடத்திலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

நில உரிமையாளர்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் பொறுப்பாளர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளர்ச்சிக்காக மனமுகந்து நிலங்களை வழங்கினார்கள். 

ரெயில்வேக்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு ரெயில்வே துறையால் இதுநாள் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. 

தொடர்ந்து பல வருடங்களாக முயற்சி செய்தும் இழப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வருவாய் இழந்த நிலையில் நிலவுடைமையாளர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தற்போது ரெயில்வே துறையில் இழப்பீடு வழங்க போதிய நிதி வசதி இருப்பதாகவும் தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நிலை இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு ரெயில்வே துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் விரைந்து இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே பட்டுக்கோட்டை ரெயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் வழங்கிய நில உடைமையாளர்களும், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தினரும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் விரைந்து இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து தரவும், ரெயில்வே துறையினர் விரைவில் இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டியும் கலெக்டருக்கும், ரெயில்வே துறைக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments