திருவாரூர் காரைக்குடி டெமு ரயில் பயண நேரம் மீண்டும் குறைப்பு





மயிலாடுதுறை-திருவாரூா்- காரைக்குடி இடையிலான 187 கி.மீ. தொலைவு கொண்ட ரயில் பாதை, ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான ரயில் பாதையாகும். 1894-இல் மயிலாடுதுறை- முத்துப்பேட்டை, 1902-இல் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை, 1903-இல் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி, 1952-இல் அறந்தாங்கி-காரைக்குடி என படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனளித்தது.

இந்நிலையில், அகல ரயில் பாதைப் பணிக்காக, 2006-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை-காரைக்குடி வரையிலான பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 2012-இல் பட்டுக்கோட்டை- காரைக்குடி, திருவாரூா்-பட்டுக்கோட்டை இடையிலான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து அகல ரயில் பாதை பணிகள் தொடங்கப்பட்டாலும், மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. தொடா் முயற்சிகளுக்குப் பிறகு,.. காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரை 157 கி.மீ.தூரம் அகல ரெயில்பாதையாக ரூ.674 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு இந்த பாதையில் பாசஞ்சர் ரெயில் விடப்பட்டது.

இந்த பாதையில் 74 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் ஊழியர்கள் இல்லாததால் ரெயிலில் வரும் கேட் கீப்பர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிவிட்டு ரெயில் சென்றபின் மீண்டும் கேட்டை திறந்து விட்டு அதே ரெயிலில் அடுத்த கேட்டை திறக்க பயணம் செய்வார். இதனால் தான் பயணநேரம் அதிகமானது.இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 4.45 மணி நேரமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ரயிலின் பயண நேரம் மேலும் 75 நிமிடங்கள் குறைக்கப்பட்டு பயண நேரம் 3 மணி 30 நிமிடமாக வருகின்ற 7ம் தேதி முதல் குறைக்கப்படுகிறது.அதன்படி பிப்ரவரி 7ம் தேதி முதல் திருவாரூரில் இருந்து காலை 8:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 11:45க்கு காரைக்குடி ரயில் நிலையம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மாலை 4 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், இரவு 7:30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் சேவை கிடையாது.

இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,  பேராவூரணி, ஆயிங்குடி ,அறந்தாங்கி ,  பெரியகோட்டை,  காரைக்குடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் 

பயணம் நேரம் குறைந்துள்ளதால் திருவாரூர்‌ டு‌ காரைக்குடி வழித்தடம் பொதுமக்கள் , வர்த்தகர்கள் ‌, வியாபாரிகள் ‌, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments