கல்குவாரியை மூடக்கோரி புதுக்கோட்டை-திருச்சி சாலையில் கிராம மக்கள் மறியல்
வத்தனாக்குறிச்சியில் செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி புதுக்கோட்டை-திருச்சி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் வெவ்வயப்பட்டி மற்றும் வத்தனாக்குறிச்சி ஆதிதிராவிடர் கூட்டு குடியிருப்பு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கிரஷர், தார் பிளாண்டுடன் கூடிய கல் குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்குவாரியை மூடக்கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பொம்மாடிமலை என்ற இடத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

மூச்சுத்திணறல்
சாலை மறியல் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- இந்த கல்குவாரி அரசு விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. குவாரியில் வைக்கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், குழந்தைகள் இந்த அதிர்வால் மனதளவில் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள், கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது.
இந்த கல்குவாரி மற்றும் தார் பிளாண்டிலிருந்து வரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிதண்ணீரும் மாசுபடுவதால் வத்தனாக்குறிச்சி, வெவ்வயப்பட்டி,  சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல் பட்டி, கதிரேசன் நகர், புதுவயில், திருமலைராயபுரம், உடையாம்பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை
இந்த கல்குவாரியை மூடக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுகிறோம். இந்த கல்குவாரியை மூடும் வரை மறியலை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி, குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி உள்ளிட்ட வருவாய்த்துறையினரும். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments