மார்ச் 22, நவ.1ம் தேதி கூடுதல் கிராம சபை கூட்டங்கள்: அரசாணை வெளியீடு






சென்னை: மார்ச் 22 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கூடுதல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: 

சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், ‘தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருடத்திற்கு 4 முறை அதாவது குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் பங்கேற்பதையும், முடிவெடுப்பதையும் அதிகப்படுத்தும் வகையில் இனி ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். கூடுதல் கிராம சபை கூட்டங்கள் உலக தண்ணீர் தினமான மார்ச் 22 மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய நாட்களில் நடத்தப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுப்பு வெளியிட்டார்.

எனவே, 4 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசாணையை மாற்றியமைத்து ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினம், நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய ஆறு நாட்களில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்திட அரசு ஆணையிடுகிறது. மேலும் மார்ச் 22 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதியன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்படுகிறது.

மார்ச் 22 - நீர்வளத்தை காப்பது மற்றும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்து செயல்பட அறிவுறுத்துதல் மற்றும் தற்போது ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு தனிநபர் ஒருவருக்கு சராசரியாக 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதிபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கிராம சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நவம்பர் 1- ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

கிராமசபை கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அறிக்கையை ஒரு வாரத்திற்குள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை ஒருங்கிணைந்து அரசுக்கு அனுப்பி வைக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments