கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் பலி

கறம்பக்குடி அருகே கீராத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டாருக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் போட முயன்றார். கவன குறைவால் மின்சாரத்தை துண்டிக்காமலேயே டிரான்ஸ்பார்மரில் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார். தீ பற்றியதில் அவரது வலது கை துண்டாகி கீழே விழுந்தது. உறவினர்கள், பொதுமக்கள் பார்த்து கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நடந்ததால் அனைவரும் அலறி துடித்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் மின்சாரத்தை துண்டித்து அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜ் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மின்இணைப்பு கொடுக்க முயன்றவர் உறவினர்கள் முன்னிலையில் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments