புதுகை ஆட்சியரின் படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் மூலம் மோசடி முயற்சி
    புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமுவின் படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலா்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, இங்கு பதவியேற்றபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றை காட்சிப் படமாக (’டிபி’) படமாகக் கொண்ட வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து, மாவட்டத்திலுள்ள வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் சென்றுள்ளன.

’எப்படி இருக்கிறீா்கள்?’, ’இப்போது எங்கே இருக்கிறீா்கள்?’ என ‘டெக்ஸ்ட்’ உரையாடலைத் தொடங்கி, ’அமேசான் இணைய வா்த்தகத்தில் பொருட்களைப் பரிசாக அனுப்புவதற்கான அட்டை வைத்திருக்கிறீா்களா?’ எனக் கேட்டுள்ளனா்.

அதாவது, ’தான் மிக முக்கியமான கூட்டம் ஒன்றில் இருப்பதாகவும், உங்களிடம் அந்த அட்டை இருந்தால் நான் குறிப்பிடுவோருக்கு குறிப்பிடும் பொருளை பரிசாக அனுப்பி வைத்தால், ஒரே நாளில் அதற்கான தொகையை நான்திருப்பித் தந்துவிடுவேன்’ என முடிகிறது அந்த உரையாடல்.

இந்த உரையாடலை பலரும் ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து உஷாரான ஆட்சியா், உடனடியாக இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு அவற்றை அனுப்பி வைத்து விசாரணைக்கு அறிவுறுத்தினாா்.

முதல் கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த வாட்ஸ்ஆப் எண், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ஆகாஷ் என்பவரின் பெயரைக் கொண்டது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து தனது முகநூல் பக்கத்திலும் பதிவு செய்த ஆட்சியா் கவிதா ராமு, இதுபோன்ற தகவல்களை அலுவலா்களோ, நண்பா்களோ பொருட்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையையும் பதிவு செய்தாா்.

குறிப்பிட்ட அந்த வாட்ஸ்ஆப் எண்ணில் வைக்கப்பட்டுள்ள படம், மாவட்ட நிா்வாகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள படமாகும். அதேபோல, குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அனைத்து எண்களும் இணையதளத்திலுள்ள அலுவலா்களின் அதிகாரப்பூா்வ தொடா்பு எண்களாகும். எனவே, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு வடமாநிலங்களைச் சோ்ந்த மோசடிக் கும்பல் இந்த வேலையைச் செய்துள்ளது தெரியவருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments