அமைவிடம், போக்குவரத்து வசதியை கருத்தி்ல் கொண்டு பள்ளி திறக்கும் நேரத்தை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் தமிழக அரசு அனுமதி
    பள்ளி அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் நேரத்தை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சுற்றறிக்கை

2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளன.

இந்த நிலையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உடற்கல்வி ஆசிரியர்கள்

* உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வர வேண்டும். மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை அவர்கள் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு 2 பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. வாரத்தில் ஒரு நாளில் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

* தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் முன்பு காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும். இதில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

* மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், நூலகங்களில் நூல்களை வாசிக்க செய்ய வேண்டும்.

* வாரத்திற்கு ஒரு நாள் அனுபவப்பகிர்வு, நீதிபோதனை பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் இதற்கு பொறுப்பேற்று மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலாண்மை குழு

* ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதே நாளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துவதற்கு முன்பு பெற்றோர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அப்போது ஆசிரியர்கள் பெற்றோரிடம் அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து சொல்ல வேண்டும்.

பள்ளி தொடங்கும் நேரம்

* 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை என 7 மணி நேரம் வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 20 நிமிடம் காலை வணக்க கூட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இதேபோல் 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை 7 மணி நேரம் 10 நிமிடம் வகுப்புகள் நடத்தலாம். இவர்களுக்கு முதல் 30 நிமிடம் காலை வணக்க கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 8 பாடவேளைகள் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும். இது திட்டமிடலுக்கான பாடவேளை நேரமாகவே கொடுக்கப்படுகிறது. பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசித்து வகுப்புகள் தொடங்கும் மற்றும் முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு கல்வி சுற்றுலா

இதுதவிர கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செயல்பாடுகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்லவும் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments