கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது:கடலில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் (ஜூன் 14) முடிவடைகிறது படகுகளுடன் தயாராகும் மீனவர்கள்





கடலில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது நாளை ஜூன் 14 (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. படகுகளுடன் மீன்பிடிக்க மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983- கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும், கிழக்கு கடலோரப் பகுதியில் அதாவது திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் அமல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் மேற்கண்ட கடற்கரையோர பகுதியில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கட்டுமாவாடி, மணமேல்குடி, மீமிசல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாளை (ஜூன் 14) முடிவடைகிறது

இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பராமரித்து சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் வலைகளை புதுப்பித்து, பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் படகுகளின் உரிமம் மற்றும் தன்மையை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். மீன்பிடி தடைக்காலத்தினால் கடல் வகை மீன்கள் விற்பனைக்கு கடைகளுக்கு வராததால் அசைவ பிரியர்கள் சற்று கவலை அடைந்தனர்.

இருப்பினும் குளம், ஏரி வகை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளையுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. அதன்பின் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கலாம். 

இதற்கான ஆயத்த பணிகளில் கடற்கரையோர பகுதிகளில் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் படகுகளுடன் தயாராக உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments