அறந்தாங்கியில் கூடைப்பந்தாட்ட கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா மாணவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் சான்றிதழ் வழங்கினார்





அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்டு தோறும் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 17-வது ஆண்டாக நடைபெற்று வரும் முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிய பயிற்சி முகாம் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. காலை, மாலை என இரு வேளை நடைபெற்ற பயிற்சியில் 115-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாமின் நிறைவு தினத்தையொட்டி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் நடந்த விழாவில் சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், எதிர்காலத்தில் வலிமையான சமூகமாக, தீங்கில்லாத சமூகமாக உருவாக, மாணவ செல்வங்கள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவ-மாணவிகளின் உடல் ஆரோக்கியமடைவதோடு, தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகிறது. அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனை பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார். இதில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் தாயுமானவன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments