காசா நகர் மீது இஸ்ரேல் கடும் வான்தாக்குதல் பாலஸ்தீனிய போராளிகள் குழு தலைவர் உள்பட 10 பேர் பலி
காசா நகர் மீது இஸ்ரேல் கடும் வான்தாக்குதல்களை நடத்தியது. இதில் பாலஸ்தீனிய போராளிகள் குழு தலைவர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல், பாலஸ்தீனிய போராளிகள் மோதல்

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்கு கரையில் வசிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே மோதலும், பதற்றமும் தொடர்கதையாகி விட்டது. இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கைதும், அச்சுறுத்தலும்

இந்த நிலையில் மேற்கு கரை பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று பாலஸ்தீனிய போராளி குழு தலைவர் பாசீம் சாதி என்பவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். 17 இஸ்ரேலியர்கள் மற்றும் 2 உக்ரைனியர்களைக் கொன்ற இஸ்ரேலிய அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் கைது நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் ஜெனின் பகுதியில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இதன் காரணமாக காசா எல்லையையொட்டி தனது மக்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பை பலப்படுத்தியது.

வான்தாக்குதல்

அதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய இஸ்லாமிய போராளிகள்குழு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காசா நகரிலும், காசாவின் தென்பகுதியில் அமைந்துள்ள கான்யூனிஸ்சிலும் உள்ள போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்த தாக்குதல்களில் இஸ்லாமிய போராளிகள் குழு தலைவர் தைசிர் அல் ஜபாரி உள்பட குறைந்தது 10 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 5 வயதான ஒரு சிறுமியும் உண்டு. 55 பேர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேல் ராணுவம் சொல்வது என்ன?

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, “ காசாவில் இஸ்ரேல் ராணுவம் பிரேக்கிங் டான் என்ற பெயரில் ஒரு நடவடிக்கை எடுத்து, பாலஸ்தீனிய போராளிகள் குழு மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவித்தது.

இஸ்ரேல் ராணுவத்தின் வான்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், பாலஸ்தீனிய போராளிகள் குழு டஜன் கணக்கிலான ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினர்.

இரு தரப்பினரும் தொடர்ந்து ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இருப்பினும் அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.நா. சபையும், எகிப்தும் ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் ஐ.நா. சபை அதிகாரிகளும், எகிப்தின் அதிகாரிகளும் காசா நகருக்கு விரைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments