புதுக்கோட்டையில் 5 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளிகள், அங்கன்வாடி, சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது.





குடற்புழு நீக்க மாத்திரை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையுள்ள மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

5 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு...

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, மொத்த குடற்புழு தொற்று பாதிப்பில் இந்தியா 25 சதவீதம் பங்களிக்கிறது. கொக்கிப்புழு, உருண்டை புழு, சாட்டை புழு போன்றவை சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தின் மூலம் பரவுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில், 1 முதல் 19 வயதுடைய 4 லட்சத்து 2 ஆயிரத்து 118 குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயதுடைய 1 லட்சத்து 15 ஆயிரத்து 70 மகளிர் என மொத்தம் 5 லட்சத்து 17 ஆயிரத்து 188 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 1 முதல் 2 வயதினருக்கு 1 அல்லது 2 மாத்திரையும் (200 மில்லி கிராம்) மற்றும் 3 முதல் 30 வயதினருக்கு 1 மாத்திரையும் (400 மில்லி கிராம்) வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகளில் 6,257 பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 16-ந் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில், துணைத்தலைவர் லியாகத்அலி, நகராட்சி கமிஷனர் நாகராஜன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வயிற்றுப்போக்கு

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. அப்போது பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே குடற்புழு நீக்க மாத்திரையை 6 மாதத்திற்கு ஒருமுறை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வாரம் ஒருமுறை சாப்பிடும் இரும்புச்சத்து மாத்திரையின் பயன்கள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments