மத்திய அரசு பணிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்: போட்டித்தேர்வுக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அரசு சிறப்பு ஏற்பாடு கல்வித்தொலைக்காட்சி, இணையதளத்தில் பயிற்சி வகுப்புகள்




மத்திய அரசு பணிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்:
போட்டித்தேர்வுக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அரசு சிறப்பு ஏற்பாடு
கல்வித்தொலைக்காட்சி, இணையதளத்தில் பயிற்சி வகுப்புகள்
 
27/09/2022
சென்னை, செப்.27-

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணையதளத்தில் பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 8-ந்தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் காலி பணியிடங்களில் பணிவாய்ப்பு பெற இப்போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும்.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கல்வித்தொலைக்காட்சி

இந்த இணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெற உருவாக்கப்பட்டு உள்ளது என்பதால் இந்த இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம்.

தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (எஸ்.எஸ்.சி.-சி.ஜி.எல்) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிப்பரப்பாகிறது. மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

கட்டணமில்லா பயிற்சி

கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் ‘TN Career Services Employment’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments