தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்! அவசர சட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு!!




தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவசர சட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டசபை அடுத்த அக்டோபர் மாதம் 2-ம் வாரத்தில் கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த கூட்டத் தொடர் 4 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த கூட்டத் தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள சட்ட மசோதாக்கள், அறிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.

ஆலோசனை

அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் காலை 10.10 மணிக்கு நிறைவடைந்தது. சட்டசபை கூட்டத் தொடரின்போது அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.

குழு அமைப்பு

ஏற்கனவே, ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.6.2022 அன்று சட்டசபையில் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

விரைவில் வெளியாகும்

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 26-ந் தேதி (நேற்று) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கைகள்

இந்த அமைச்சரவை கூட்டத்தில், வேறுபல புதிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வது குறித்து அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டசபையில் சமர்ப்பிப்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்களுக்கு அறிவுரை

அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார். மேடைகளில் அமைச்சர்கள் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமைச்சர்களின் நடவடிக்கைகள், ஊடகங்களில் குற்றச்சாட்டாக வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments