அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ. 45 கோடி: அமைச்சா் மா. சுப்பிரமணியன்




புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ. 45 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியில் வெள்ளிக்கிழமை இரவு ஆட்சியா் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன்,சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் துணை சுகாதார நியைங்களைத் திறந்து வைத்தனா்.

விழாவில் அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் வடகாடு, மாங்காடு, கோவிலூா், மேலக்காடு துணை சுகாதார நிலையங்கள், அறந்தாங்கி வட்டாரத்தில் மறமடக்கி துணை சுகாதார நிலையம், கறம்பக்குடி வட்டாரத்தில் மருதன்கோன்விடுதி துணை சுகாதார நிலையம் என 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மொத்தம் ரூ. 1.25 கோடியில் திறந்து வைக்கப்பட்டன

மேலும், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது.

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 2 நகா்ப்புற நலவாழ்வு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவில், சிவகங்கை எம்பி காா்த்தி சிதம்பரம், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட மன்னகுடி, வெண்ணாவல்குடியில் ரூ.99.84 லட்சத்திலான பணிகளை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments