அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம்




அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி

நாகை மாவட்டம் அகஸ்தியன்பள்ளி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகலபாதையாக மாற்றப்பட்டுள்ளது.

37 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 77 பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. பல முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ரெயில்வே அறிவிப்பு





இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்து இருந்தது. அதன்படி ரெயில் இயக்குவதற்கான பணிகளை ரெயில்வே நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு வந்தது. அதன்படி ரெயிலின் வேகம், நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் என்ஜினில் பயணித்து சோதனை நடத்தினர்.


இந்த நிலையில் அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி இடையே ரெயில் இயக்கப்படுவது தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதும் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் ஊர்களுக்கு ரெயில் வரும் என இந்த பகுதி மக்கள் விழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். ஆனால் தற்போது ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பணிகள் இழுத்தடிப்பு

இதுகுறித்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,

வேதாரண்யம் வழியாக ஆங்கிலேயர் காலத்திலேயே ரெயில் இயக்கப்பட்டது. முக்கிய ரெயில் வழித்தடமாக இருந்த அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டது.

ஒரு வழியாக பணிகளை முடித்து இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 29-ந் தேதி (இன்று) ரெயில் இயக்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் இன்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. விரைவில் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments