10-ம் வகுப்பு ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் மட்டுமே எடுத்தவர் கலெக்டர் ஆன கதை





ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36. என் 10 ஆம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் இவ்வளவுதான். கல்லூரி சேர்க்கைக்காக படிவம் நிரப்பும்போது, என் சொந்தப் பெயரை எழுதுவதில் கூட பிழை செய்தேன். ஆனால், உறுதியான நம்பிக்கையும் கடின உழைப்பும் என்னை ஐஏஎஸ் ஆக்கின.


குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேராவின் வார்த்தைகள் இவை. இவரைப் பொறுத்தவரை உங்கள் மதிப்பெண்களுக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒருபோதும் தொடர்பில்லை.

அண்மையில் இவரது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலானது. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மிகக்குறைவாக இருந்த நிலையிலும் தற்போது மாவட்ட ஆட்சியராக உயர்ந்திருக்கும் இவரது மதிப்பெண் சான்றிதழ், மிகுந்த ஊக்கமளிக்கும் செய்தியாக பார்க்கப்பட்டு பகிரப்பட்டது. யார் இவர்?

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள சோட்டிலா கிராமத்தைச் சேர்ந்த தல்பத்பாய் - கௌரிபென் இணையரின் மூத்த மகன் துஷார் சுமேரா. இவரது தாய் கௌரிபென் பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஆசிரியரின் மகனாக இருந்தபோதும் பள்ளிகாலத்தில் துஷார் ஒரு சராசரி மாணவன் தான்.

தனது பள்ளிக்காலம்
தன் பள்ளி வாழ்க்கை குறித்து பிபிசி குஜராத்தி சேவையுடன் பேசினார் துஷார் சுமேரா. அவர் பேசியதாவது:

"12ஆம் வகுப்பிலும் கூட நான் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. பின், பிறரது ஆலோசனைகளுக்கு உட்பட்டு ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன்.

என் கல்லூரிப்படிப்பில் ஆங்கிலத்தை முதன்மைப்பாடமாக எடுத்து படிக்க விரும்பினேன். ஆங்கிலத்தில் ஒரு பெயரை எழுதும்போது முதல் எழுத்தை பெரிய எழுத்தாக (கேப்பிட்டல் லெட்டரில்) எழுத வேண்டும் என்பது கூடத் தெரியாது என்றாலும், என் நம்பிக்கையை நான் இழக்கவில்லை. படிப்பைத் தொடர்ந்தேன்.

குடிசையிலிருந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்
வெறுங்கால்களில் ஓடி இந்தியாவுக்கு அபார வெற்றி தேடி தந்த தயான் சந்த்
தமிழக வீரர் மாரியப்பனின் தொடர் சாதனைகள் தெரியுமா? 8 சுவாரஸ்ய விஷயங்கள்
இந்த நிலையில், உன் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினால் தினமும் தவறாமல் ஆங்கில நாளிதழ்கள் வாசி என்று என் பேராசிரியர் குப்தா எனக்கு அறிவுறுத்தினார். நான் என் கல்லூரியில் நாளொன்றுக்கு சுமார் 3 மணி நேரம் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்பேன். அப்போது, ஒவ்வொரு வார்த்தையும், வாக்கிய வடிவமைப்பையும் கூர்ந்து கவனிப்பேன்.

உலக பொருளாதாரம், வெளியுறவுக்கொள்கைகள், பொருளாதாரம் ,நாட்டு நடப்பு உள்ளிட்ட தேசிய, சர்வதேச நிகழ்வுகளை குறித்து தெரிந்துகொள்ள இந்த ஆங்கில வாசிப்பு எனக்கு பெரிதும் உதவியது. இப்படியாக என் இளங்கலை பட்டத்தை பெற்றேன்.

பின், முதுகலை கல்வியியல் (எம்.ஏ. பி.எட்) முடித்த பிறகு, மாதம் 2500/- ருபாய் சம்பளத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது. எல்லோரையும் போல நானும், இந்த அரசு வேலையால் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினேன்.

ஆசிரியர் வேலையை விடு. ஐ.ஏ.எஸ் படி:

அப்போது சுரேந்தர்நகர் மாவட்டத்தின், மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக வினோத் ராவ் நியமிக்கப்பட்டார். அவரிடம் எனது ஐஏஎஸ் ஆசையை தெரிவித்தேன்.

அதற்கு அவர், "நீ நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆகலாம். அடுத்த முறை என்னைச் சந்திக்கும்போது உன் தந்தையுடன் வா' என்றார்.

என் தந்தையிடம், நான் ஒரு வழக்கமான வேலையை செய்வதை விட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதன் முக்கியத்துவத்தை அவர் தெளிவாக விளக்கினார். இது என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.

பின்னர், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக விரும்பும் இளைஞர்களுக்கு உதவி வரும் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசியர் அம்ராபாலி மர்ச்சண்ட் குறித்து எனக்கு தெரிய வந்தது. அவரும் என்னால் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

இதற்கும் மேலாக, "உன் கனவுகளை பாதியில் நிற்க நான் விட்மாட்டேன். என்ன ஆனாலும், நீ உன் லட்சியத்தை அடைந்தே தீர வேண்டும்" என்று என் தந்தை என்னை ஊக்கப்படுத்தினார்.

இதையடுத்து நான் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பாதுகாப்பான அரசு வேலையை விட்டுவிட்டு படிக்கச் செல்ல வேண்டும்.

எனக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. ஒன்று நான் விடுப்பு எடுக்கலாம் அல்லது வேலையை விடலாம். விடுப்பு எடுத்தால் என் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே நான், வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க முடிவு செய்தேன்.

மதிப்பெண்கள் அறிவுக்கு அளவீடல்ல

தேர்வு சமயத்தில்,எங்கள் குடும்பம் கடினமான சூழ்நிலையைச் சந்தித்தது. அப்பாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. நான் தேர்வுக்காக சுரேந்தர் நகர் சென்றிருந்த வேளையில்தான் எனக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து வந்த பிறகும் என் தந்தை என்னை, என் லட்சியத்தை அடைய ஊக்குவித்தார்.

நான் வீட்டின் மூத்த மகனாக இருந்த போதும் என் தம்பிகள்தான் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். நான் என் படிப்பில் தீவிரமாக இருந்தேன். சுமார் 5 ஆண்டுகளுக்கு நான் எந்த பண்டிகைகள், கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை. விடுப்பு கூட எடுக்கவில்லை. என் மதிப்பெண் சான்றிதழ்கள் என் அறிவை அளவிடும் கருவிகள் அல்ல என்று நான் உறுதியாக நம்பினேன். உங்கள் நம்பிக்கை, கடின உழைப்பு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் உங்களை வெல்ல வைக்கும்.

வெற்றிக்கு மதிப்பெண்கள் முக்கியம் அல்ல
வஜுபாய் பர்சானா, பாக்யேஷ் ஜா ஆகிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரும் கூட துஷார் சுமேராவின் மதிப்பெண் தொடர்பான வார்த்தைகளை ஒப்புக்கொள்கின்றனர்.

அதில் , வஜுபாய் மதிப்பெண்களுக்கும் தன் வெற்றிக்குமான தொடர்பின்மை குறித்து பேசியபோது, " ஒரு சிறிய கிராமத்தில் நாங்கள் வாழ்ந்தோம். எங்களுக்கு வெளியுலகம் தெரியாது. குடிமைப்பணி அதிகாரியாக வருவதற்கு என் தன்னம்பிக்கை மற்றும் வளமான அறிவாற்றல் மட்டுமே உதவின. உங்களுக்கு ஒரு வளமான அறிவாற்றலும் நம்பிக்கையுடன் கூடிய தகவல் தொடர்புத் திறனும் இருக்குமேயானால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ் ஒரு பொருட்டல்ல. உறுதிப்பாடு, நம்பிக்கை, கடின உழைப்பு இவை மட்டுமே உங்களை சாதனை நோக்கி அழைத்துச் செல்லும்," என்கிறார்.

மொத்தத்தில், மதிப்பெண்களை விட உங்கள் நம்பிக்கையும் கடின உழைப்புமே முக்கியமானது என்பதை விளக்கும் விதமாக இருக்கிறது ஆட்சியர் துஷார் சுமேராவின் கதை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments