கடலோர காவல், கப்பற்படையில் சேர மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்




கடலோர காவல், இந்திய கப்பற்படையில் சேர மீனவ குடும்பங்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும்.

கடலோர காவல் படை

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையும் நவிக் மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பணிகளிலும் சேர்வதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு இந்த மாத (பிப்ரவரி) இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதில் தகுதியுள்ள மீனவ வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

3 மாத பயிற்சி

விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகங்களில் இருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் இருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் https://drive.google.com/drive/folders/118xcdsoxm9RH-0-ySMT2wjToEHtWskh?usp=sharing என்ற இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி 3 மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையில் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

18-ந் தேதி கடைசி நாள்

எனவே பிளஸ்-2 தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டு தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவ வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாளாகும்.

மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments