‘வடமாநிலத்தவர்களால் வேலை பறிபோகிறது’ - அதிராம்பட்டினத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மறியல்




 

அதிராம்பட்டினம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்  (பிப்.9) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments