புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதனை செய்தனர்




    புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதனை செய்தனர்.

பருவம் தவறிய மழை

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தன. மழை நின்ற பிறகு அறுவடை மேற்கொண்டாலும் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலை உள்ளது.

இதனை 22 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக முத
ல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வெயிலில் காய வைக்க...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 400 எக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் 44 ஆயிரத்து 246 எக்டேர் நெற்பயிர்கள் மழைக்கு முன்பு அறுவடை செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பெய்த மழையால் சுமார் 15 ஆயிரத்து 819 எக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் 176 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று முன்தினம் வரை 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அறுவடை நடைபெற்று வருகிற நிலையில் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் அதனை கொள்முதல் நிலையங்களில் வளாகத்தில் வெயிலில் காய வைக்கப்பட்டு வருகிறது.

ஈரப்பதம் பரிசோதனை

இந்த நிலையில் தமிழகம் வந்த மத்திய குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூர், கல்லாக்கோட்டை, ரெகுநாதபுரம், தட்டாமனைப்பட்டி, குளத்தூர்நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் யூனுஸ், பிரபாகரன், போயோ ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். இதில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் கொள்முதலுக்காக காயவைக்கப்பட்டிருந்த நெல் குவியல்களில் இருந்து நெல்லை அள்ளி நவீன கருவி மூலம் ஈரப்பதத்தை பரிசோதனை செய்தனர்.

இதில் பெருங்களூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நெல்லின் ஈரப்பதம் 19.8 சதவீதம் வரை இருந்தது. இந்த ஆய்வின் அறிக்கையை மத்திய அரசிடம் குழுவினர் சமர்ப்பித்த பின் அறிவிப்பு வெளியாகலாம். இந்த ஆய்வின் போது கலெக்டர் கவிதாராமு முன்னிலை வகித்தார். தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சீதாராமன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மணப்பாறை, திருவெறும்பூர்

திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய வேளாண் தொழில்நுட்ப குழுவினர் நெல்மணிகளில் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த 2 விவசாயிகளின் நெல்மணிகளில் ஈரப்பதத்தை ஆய்வு செய்தபோது ஒருவரின் நெல் மாதிரி 16.7 என்றும், மற்றொருவரது நெல் மாதிரி 17.9 என்றும் வந்தது. அந்த மாதிரிகளை அதிகாரிகள் குழுவினர் எடுத்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் திருவெறும்பூர் அருகே குண்டூர் பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டிருந்த நெல்மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். பின்னர் மணப்பாறை அடுத்த தெற்கு சேர்பட்டி மற்றும் நல்லாம்பிள்ளை பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளை மத்திய குழுவினர் சோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் அந்த நெல்லின் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல்மணிகளை ஓரிரு நாட்களில் கொள்முதல் செய்ய வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும். நெல்லுக்கு லாபகரமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மத்திய குழுவினர் தெரிவித்துவிட்டு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments