மும்பையில் வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்




மும்பையில் நடந்த விழாவில் நாட்டின் 9 மற்றும் 10-வது வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொழில், சுற்றுலா மேம்படும் என்று அவர் பேசினார்.

புதிய வந்தே பாரத் ரெயில்கள்

நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன. முதல் வந்தே பாரத் ரெயில் சேவை 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நாட்டின் 9, 10-வது வந்தே பாரத் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பை சி.எஸ்.எம்.டி. - சோலாப்பூர் மற்றும் மும்பை சி.எஸ்.எம்.டி. - ஷீரடி இடையே அந்த புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனிவிமானம் மூலம் மும்பை வந்தார்.

மோடி தொடங்கி வைத்தார்

பின்னர் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் 18-வது நடைமேடையில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சித்தி விநாயகர் நினைவு பரிசை வழங்கினர்.


பின்னர் அவர் சி.எஸ்.எம்.டி. - ஷீரடி மற்றும் சி.எஸ்.எம்.டி.- சோலாப்பூர் இடையேயான வந்தே பாரத் ரெயில்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டியத்தில் மட்டும் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒரே நாளில்...

இந்த நாள் இந்திய ரெயில்வேக்கு மிகப்பெரிய நாள். ஒரே நாளில் 2 வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த ரெயில்கள் வணிக நகரங்களான மும்பை, புனேயை இணைக்கின்றன. கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், தொழில் அதிபர்கள், பக்தர்கள், விவசாயிகளுக்கு இந்த ரெயில்கள் மிகுந்த பயன் அளிக்கும். புதிய வந்தே பாரத் ரெயில்கள் மூலம் புனித ஸ்தலங்களான பண்டர்பூர், சோலாப்பூர், அக்கல்காட், துல்ஜாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில், சுற்றுலா மேம்படும். பக்தர்கள் பயன்பெறுவார்கள்.

வந்தே பாரத் ரெயில் இந்தியாவின் வேகம், உயரத்தை பிரதிபலிக்கிறது. நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 வந்தே பாரத் ரெயில்கள் 108 மாவட்டங்கள், 17 மாநிலங்கள் வழியாக இயக்கப்படுகிறது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்பு எல்லாம் தங்கள் ஊர்களில் ரெயில்கள் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் வந்தே பாரத் ரெயில் சேவை கேட்டு கோரிக்கை அளிக்கின்றனர்.

நடுத்தர மக்களுக்கு பலம்

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் சம்பளம் வாங்கும் நபர்கள், வியாபாரம், வணிகத்தில் ஈடுபடும் மக்கள் என நடுத்தர பிரிவை சேர்ந்த யாராக இருந்தாலும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டுக்கு முன் ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தினர். எங்கள் அரசு முதலில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 20 சதவீதம் வரி செலுத்தியவர்கள், தற்போது எந்த வரியும் செலுத்த வேண்டியது இல்லை. புதிய வேலையில் சேர்ந்தவர்கள், சேமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன். எல்லோரும் வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவ், சிறு, குறு தொழில் துறை மந்திரி நாராயண் ரானே, மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments