தென்னக ரெயில்வே சார்பில் திருச்சி-பெங்களூரு இடையே நேரடி தினசரி ரெயில் இயக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு சிறந்த நகரமாக இந்த நகரம் உள்ளது. இந்த நகரம் பல்வேறு சுற்றுலாத்தலங்களையும் ஒருங்கே பெற்றிருப்பது இன்னும் சிறப்பு.

ஐ.டி. நிறுவனங்கள்

திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தென்மாவட்ட மக்கள் பலர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இதுபோல் பெங்களூருவை சேர்ந்தவர்கள் கோவில் நகரமான திருச்சிக்கு வந்து செல்கிறார்கள். மேலும் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் உள்ள ராமேஸ்வரம், மதுரை போன்ற மாவட்டங்களுக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்மிக பயணமாக வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள என்ஜினீயர்கள் பணியாற்றுகின்றனர்.

வெள்ளிக்கிழமை சொந்த ஊர் திரும்பும் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு, திங்கட்கிழமை தங்கள் பணிகளுக்கு திரும்புவது வாடிக்கை. கர்நாடகாவில் இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரெயில் சேவை

பெங்களூரு மற்றும் திருச்சி நகரங்களுக்கு இடையில் ஏராளமானோர் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர். திருச்சியில் இருந்து பெங்களூரு சுமார் 400 கி.மீ. தூரம் உள்ளது. இரு நகரங்களுக்கு பயண தூரம் 7 மணி முதல் 9 மணி நேரம் ஆகிறது. அரசு பஸ் என்றால் 9 மணி நேரமும், தனியார் பஸ் என்றால் 7 மணி நேரமும் ஆகிறது. ரெயிலில் நாமக்கல் வழியாக சென்றால் 7½ மணி நேரமும், கரூர், ஈரோடு வழியாக என்றால் 9½ மணி நேரமும் ஆகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, பெங்களூரு வழியாக மைசூருக்கு மட்டும் தினமும் இரவு ரெயில் சேவை உள்ளது. இதுதவிர வியாழன், சனிக்கிழமை தவிர மற்ற நாட்கள் திருச்சி வழியாக பெங்களூரு மற்றும் அதன் அருகே உள்ள யஸ்வந்த்பூர், பங்காருபேட் ரெயில் நிலையங்களுக்கும், ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்கள் பெங்களூரு மற்றும் அதன் அருகே உள்ள யஸ்வந்த்பூர், பங்காருபேட் ரெயில் நிலையம் வழியாக திருச்சியை கடந்து செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் ஒன்று தினமும் செல்கிறது.

இவற்றில் மைசூரு-மயிலாடுதுறை-மைசூரு எக்ஸ்பிரஸ் (தினசரி), ஹூப்ளி-தஞ்சை-ஹூப்ளி சிறப்பு ரெயில், ஹூப்ளி-ராமேஸ்வரம்-ஹூப்ளி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-வேளாங்கண்ணி-பெங்களூரு சிறப்பு ரெயில், வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ஆகிய வாராந்திர ரெயில்கள் தென்மேற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சி-ஹம்சாபர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் பங்காருபேட் ரெயில் நிலையம் வழியாக வடமேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படுகிறது.

நேரடி ரெயில் இல்லை

ஆனால் திருச்சி-பெங்களூரு இடையே நேரடி ரெயில் சேவை தற்போது இயக்கப்படவில்லை. மேலும் தென்னக ரெயில்வேயில் முக்கிய கோட்டமாக விளங்கும் திருச்சியில் இருந்து ஒரு ரெயில் கூட தென்னக ரெயில்வே சார்பில் இயக்கப்படவில்லை. இதனால் பலரும் பஸ்களை நம்பியே உள்ளனர். இதேபோன்று தான், சென்னை மற்றும் கோவையை சேர்ந்த பலரும், பெங்களூரு சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு வார இறுதி நாட்களில் சொந்த ஊர் சென்று திரும்புகின்றனர்.

ஆனால், அந்த நகரங்கள், பெங்களூருவில் இருந்து ரெயில் மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் திருச்சி நிலைமைதான் மோசம். பெங்களூருவில் பணிபுரியும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர்கள் வசதிக்காக, திருச்சி-பெங்களூரு இடையே நேரடி தினசரி ரெயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கூட்ட நெரிசல்

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்ல, மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றே உள்ளது. இந்த ரெயிலும் கூட்ட நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதனால், சாப்ட்வேர் என்ஜினீயர்கள், ஆம்னி பஸ்களில் பயணிக்கும் நிலைமை. அதன் கட்டணம் மிக அதிகம். மேலும், ரெயிலுடன் ஒப்பிட்டால் ஓய்வெடுக்கும் வசதி மிகவும் குறைவு. இதனால், பெங்களூரு-திருச்சி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

திருச்சி ரன்வே நகரை சேர்ந்த மணிகண்டன்:- திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்ல வேண்டுமானால் ரெயிலில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. திருச்சியில் இருந்து நேரடியாக நாமக்கல் வழியாக பெங்களூருக்கு ரெயில் இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் பெங்களூருவில் பணியாற்றும் எங்களை போன்றவர்களுக்கு பெங்களூரு சென்று வர வசதியாக இருக்கும். புதிய ரெயில் இயக்கும் வரை திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக பயணிக்கும் நாகர்கோவில்-பெங்களூரு தினசரி ரெயிலை மணப்பாறை, திருச்சி வழியாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயன் பெறுவார்கள்

புதுக்கோட்டை ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த மோகன் ராஜா:- புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக பெங்களூருவுக்கு நேரடி ரெயில் சேவை இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் பெங்களூருவில் பணியாற்றி வருகின்றனர். மேலும் திருமணமாகி சென்ற பெண்களும் பலர் வசிக்கின்றனர். பெங்களூருவுக்கு பயணம் செய்ய வேண்டுமானால் இங்கிருந்து பஸ்சில் திருச்சி சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பெங்களூரு செல்ல வேண்டி உள்ளது. அந்த ரெயிலிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். முன்பதிவு டிக்கெட் முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்க வேண்டும். இல்லையெனில் ரெயில் பயணத்தை விட்டு ஆம்னி பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக பெங்களூருவுக்கு ரெயில் இயக்கினால் இம்மாவட்டம் மற்றும் திருச்சியை சோ்ந்த பயணிகள் பலர் பயன் பெறுவார்கள்.

கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்

கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்:- கரூரில் இருந்து பெங்களூருக்கு பணியின் காரணமாக ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால் கரூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ரெயில்களில் செல்பவர்களும் கஷ்டப்பட்டு செல்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களின் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. இதில் பொதுப்பிரிவில் செல்வது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. மேலும் இதில் 2 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து வரும் ரெயிலிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். பெங்களூருக்கு அதிகமான ரெயில்களும் விட வேண்டும்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜோக்கியம்:- பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்து பெரிதும் கிடையாது. மாவட்டத்திலேயே எங்கள் கிராமமான சில்லக்குடியில் மட்டும் ரெயில் நிலையம் உள்ளது. அங்கு பயணிகள் ரெயில் தான் நின்று செல்லும். இதனால் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், வேலைக்கு செல்வோர்கள், மாணவ-மாணவிகள் வெளியூர்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு ரெயிலில் செல்ல வேண்டும் என்றால் திருச்சி ரெயில் நிலையத்துக்கு சென்று தான் ரெயில் ஏறி செல்ல வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்ல மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றே இருக்கிறது. அந்த ரெயிலிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து பெங்களூருக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே திருச்சி-பெங்களூரு இடையே தினசரி ரெயில் சேவையை மத்திய அரசு தொடங்க வேண்டும். ஏற்கனவே திருச்சியில் இருந்து அரியலூர், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரெயிலை மீண்டும் இயக்கினால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சில்லக்குடி ரெயில் நிலையத்தில் கொரோனாவிற்கு பிறகு விருத்தாசலத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரெயில் மட்டும் காலை நேரத்தில் நின்று செல்கிறது. ஆனால் திருச்சி-விருத்தாசலம், விழுப்புரம்-மதுரை, மதுரை-விழுப்புரம் ஆகிய பயணிகள் ரெயில் சில்லக்குடியில் நின்று செல்வதில்லை. எனவே அந்த பயணிகள் ரெயில்களை சில்லக்குடியில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் இயக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த அருள்:- திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக பெங்களூரு செல்லும் அதிவிரைவு ரெயிலை எவ்வித காரணமும் இன்றி ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் இந்த ரெயிலை நம்பியுள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். விருத்தாசலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் போன்ற மாவட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவையாக உள்ள இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ரெயில் சேவையை மீண்டும் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments