புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.75 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகள் நிர்வாக அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.75 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிக்கப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் சென்னை நீங்கலான நகர்ப்புறப் பகுதிகளுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் போதுமான அளவில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர், அன்னவாசல் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 18.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 2 லட்சத்து 55 ஆயிரத்து 18 பேர் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர் அன்னவாசல் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை மேம்பாடு செய்து, கூடுதலாக குடிநீர் வழங்க மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.75.07 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பயனாளிகளுக்கு, நாளென்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் புதிதாக நீருறிஞ்சு கிணறு, மின்இறைப்பான்கள் மற்றும் அடிக்கடி நீர்க்கசிவு ஏற்படும் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்தல் ஆகிய புனரமைப்பு பணிகள் ரூபாய் 75.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த அனைத்து பணிகளும் 2024-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் இதர பயனாளிகளுக்கு, வடிவமைக்கப்பட்ட அளவான நாளென்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு கூடுதலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாகும்.

இதுதவிர நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.434.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சமூகநல இயக்குனர் அலுவலகம்

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குனர் அலுவலகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தக் கட்டிடம், 120 பணியாளர்கள் பணியாற்றும் வகையில் தரை மற்றும் 2 தளங்களுடன், 26 ஆயிரத்து 44 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments